« Home

பழைய பஞ்சாங்கமும்,,,,,


அப்போது நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். கல்லூரி எங்கள் ஊரில் இருந்து 6 மைல் தூரத்தில் உள்ள நகரத்தில், பஸ்ஸில் தினமும் அதிகாலையில் போய் இரவு திரும்பி வருவோம். இதனால் மிக நெருங்கிய உறவினர்கள் எங்கள் ஊரில் கிடைக்காத, நகரத்தில் கிடைக்கும், பொருட்களை வாங்குவதற்கு எங்களை பயன்படுத்துவதுண்டு.

அப்படித்தான் ஒருநாள் நானும் நண்பர்களும் பஸ்ஸிற்காக காத்திருக்கும்போது அப்பாவின் ஒன்றுவிட்ட அக்கா என்னிடம் பணத்தை தந்து, நகரத்தில் உள்ள புத்தக கடையில் ஒரு புது பஞ்சாங்கம் வங்கி வரும்படி ஊறினார், நானும் ஓம் வாங்கி வருகிறேன் என்று பஸ்
ஏறிவிட்டேன். ஆனால் அன்றைய தினம் நாங்கள் நகரத்திற்கு போகாமல் கல்லூரி வாசலில் பஸ்ஸில் ஏறிவிட்டோம், பஞ்சாங்கமும் வாங்கவில்லை. மறுநாளும் ஏதோ காரணத்தால் வாங்கமுடியவில்லை. மூன்றாம் நாள்தான் வாங்க முடிந்தது.

அன்றுதான் முதன்முதலில் பஞ்சாங்கம் ஒன்றினை விரும்பியோ விரும்பாமலோ ஊடறுத்து பார்ப்பதற்கு, அதுவும் ஓடும் பஸ்ஸில் சந்தர்பம் கிடைத்தது.

அதில்,
அன்னப்பால் பருக்க,,,
அறுவடை செய்ய,,,,
அடிக்கல் நாட்ட,,,,
புது தொழில் தொடங்க,,,
புது மனை புக,,,
புது கணக்கு தொடங்க,,,
,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,

இப்படி எல்லாவற்றிக்குமே (அதற்காக புதுச்செருப்பு போட இருந்ததா என்று பின்னூட்டம் போட வேண்டாம்-மொத்தத்தில் புது ஆடை, அணிகலன் அணிய நல்ல நேரம் இருந்தது) நல்ல நேரம் பார்ப்பதற்கு பஞ்சாங்கத்தில் கணித்திருந்தார்கள். ஆனால் புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு என்று
எந்த நல்ல நேரமும் குறிக்கவில்லை, சரி எனக்கு ஒரு சாட்டு கிடைத்துவிட்டது மாமியிடம் இருந்து தப்பிக்க.

வாங்கிய வாக்கிய பஞ்சாங்கத்தை கொடுப்பதற்கு மாமி வீட்டிற்கு போனபோதுதான் தெரிந்தது மனுசி நல்ல கொதியில இருந்தது.

"ஏன்ராப்பா உன்னட்டை ஒரு வேலை சொன்னா நேரத்திற்கு செய்யமாட்டியோ?"
"நீங்க வேற, எல்லா வேலைகளுக்கும் பஞ்சாங்கம் பாத்து செய்யிற நீங்க, புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு மட்டும் நேரம் பார்த்து தந்தனீங்களோ? அதுதான் நேரத்திற்கு நடக்கேல்லை"

"இது என்ன விசர்த்தனமா கதைக்கிறீர், யாராவது புது பஞ்சாங்கம் வாங்குவதற்கும் நேரம்
பார்ப்பினமோ?"

"ஏன் பஞ்சாங்கம் பார்க்கிறது மட்டும் விசர்த்தனமான படாத உங்களுக்கு இது மட்டும் விசர்த்தனமாக தெரியுது?"

"உன்னோட கதைக்கேலாது, சரி இப்ப நீ வாங்கியந்த பஞ்சாங்கத்தில பார், அதுக்கு ஏதும் நேரம் போட்டிருக்கோ?"
"இல்லை"

"நான் சொன்னனான்தானே, நீ விசர்த்தனமான வேள்வி கேட்கிறாய் என்று - இப்ப தெரியுதோ"
"அப்ப, எல்லாத்துக்கும் நல்ல நேரம் கணித்த ஐயர், இதுக்கு மட்டும் நல்ல நேரம் கணிக்க தேவையில்லை என்று விட்டிருக்கிறார் என்றால் அவருக்கு தெரியும் இதெல்லாம் விசர்த்தனம்-ஊர் உலகத்தை ஏமாற்றுவதற்குத்தான் பஞ்சாங்கம், அந்த பஞ்சாங்கத்தை பார்த்து எல்லாத்தையும் செய்யிறதுதான் விசர்த்தனம்"

"உனக்கு விசர்தான்"
"ஏன்? நல்ல நேரங்களை பார்ப்பதற்காக உள்ள பஞ்சாங்கத்தை நல்ல நேரத்தில் வாங்க வேண்டியதில்லை என்றால் மற்றதற்கெல்லாம் நல்ல நேரம் பார்ப்பதில் அர்த்தமில்லை"

"இதற்கு மேல் உன்னோடை கதைத்தால் எனக்குத்தான் விசர்"

என்று கூறிவிட்டு மாமி அந்த இடத்தை விட்டு போய்விட்டார். நானும் "குருக்கள் செய்தால் குற்றமில்லை" என்று நினைத்துக்கொண்டு அந்த நேரத்திற்கு விட்டுவிட்டேன்.

20 வருடங்கள் ஓடிவிட்டன,

சரி, இதனை இப்ப Blogல் போடப்போறனே, (போட்டால் என்னுடைய சந்தேகம் தீரும் என்றுதான்) அதற்கு முதல் இப்ப உள்ள பஞ்சாங்கத்தை (இரண்டாவது தடவையாக) எடுத்துப்பார்த்தால், அதில் கூட புது பஞ்சாங்கம் வாங்குவதற்கு என்று எந்த நல்ல நேரமும் கணிக்கப்பட்டிருக்கவில்லை.

வையகம் உள்ளவரை ஏமாற்றுவதற்கும், ஏமாறுவதற்கும் யாரோ இருந்துகொண்டிருப்பார்களா என்ன?

வாங்க குமரேஸ்!
நல்லாயிருக்கு, அடிக்கடி எழுதுங்க.
இந்த மாதிரி ஏமாற்றுகளைக் கண்டுதான் பாரதியார் "சோதிடந்தன்னை இகழ்"ன்னு சொல்லி வச்சிருக்கார்.
அது சரி, வலைப்பதிவைப் பஞ்சாங்கத்தைப் பாத்துத் தொடங்கினீங்களா இல்லையா?:)

எனது மகன் கடமையாற்றும் பத்திரிகையில் வாரபலன் வரும். ஒரு நாள் அந்தப் பகுதிக்குரியவர் வரவில்லை என்பதால் தான்தான் அதை எழுதினேன் என எனது மகன் சொன்னான். எப்படி எழுதினாய் என்று கேட்டேன்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னான ஒரு பத்திரிகையை எடுத்து அதில் உள்ளவற்றில் சில பலன்களை அங்கு இங்கு என்று மாற்றி விட்டுப் போட்டேன் என்றான். அப்படித்தான் வழமையாகச் . செய்பவரும் செய்வாராம். எனக்கு ஒரே சிரிப்பாய் போய் விட்டது. ஏனெனில் வேலையிடத்தில் எனது சக வேலையாட்கள் அந்தப் பலன்களை விழுந்து விழுந்து வாசிப்பது மட்டுமல்லாமல் சிலசமயங்களில் அதில் சொன்னதற்கமையவும் ஏதாவது செய்வார்கள்.

நல்ல பதிவோடு வந்திருக்கிறீங்க.

தொடர்ந்து எழுதுங்க குமரேஸ்.

வரவேற்புடன்,
மதி

ஐய்யோ. ஞாபகப்படுத்திட்டீங்களே!!!!!

நான் வேலை செஞ்ச இடத்துலே தினமும் இப்படிதான் தினப்பலன் பார்ப்போம். யாருக்காவது
'நண்பர்களால் செலவு'ன்னு வந்திருந்தாப் போதும். அவுங்கதான் அன்னைக்குக் காஃபி
வாங்கித்தரணும்!!!!

இப்பத்தான் தெரியுது, எப்படி ஒரு சிலருக்குமட்டும் வந்ததே வந்துக்கிட்டு இருந்ததுன்னு:-)

Post a Comment