« Home | அடுத்து வருவது.... » | பதிவு 1 » | இன்னமும் மழை இருக்காம்.... » | தேடல் ஞாபகத்தில் » | இந்த இலை நல்லாயிருக்கு » | வத்தலகுண்டு வாத்துக்களும் வலைப்பதிவு தேடுபொறிகளும் » | புரட்சித்தமிழரசுக் கட்சி (Fully Computerised) » | பரட்டைத்திரிசங்கு சாமியாரே » | தூய வெள்ளை அறிக்கை » | சத்தியசோதனை - தமிழ்மணத்திற்கு »

முகமூடிகளை நீக்கினால் ஆனந்தம்

நாம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு முகம் இருக்கும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொருவிதமாக இருக்கும். முகத்திற்கு முகம் வேறுபாடு இருக்கும்.

நாம் எல்லோருமே முகமூடி அணிந்த மனிதர்கள் என்பார் ஒரு ஞானி.முகமூடிக்கு உள்ளே அன்பான, ஆனந்தமான உள்ளம் உள்ளது.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

நம்முடைய ஆனந்தமான, அன்பான முகத்தைக் காட்டாமல், நம்முடைய முகமூடியை மட்டும்மே வெளி உலகத்திற்கு தெரியும்படி வைத்திருக்கிறோம்.

முகமூடியை நாம் கழற்றிவிட்டால், அற்புதமான ஞானம் நம்மிடையே புதைந்நிருப்பதை நாம் உணர்வோம்.

இந்தப் பிரபஞ்சத்தில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அமீபா, புல், பூண்டு, செடி, கொடி, மரம், வண்டு, பூச்சி, ஊர்வன, பறப்பன, நீர்வாழ் உயிரினம், கால்நடை என்று பலவகை உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் மனிதனாக வாழ நமக்கு அதிர்ஸ்டம் கிடைத்துள்ளது. நமக்கு மேலே உள்ள, நமக்கு புரிபடாத சக்தி, நம்மை மனிதனாக வாழ அனுமதித்துள்ளது.

இந்த வாய்ப்புக்குக் காரணம் நாம் இந்த வாழ்கையில் ஆனந்தமாக வாழ்வதற்கும், பிறரை ஆனந்தமாக வாழ வைப்பதற்கும்தான்.

ஆனால் எங்கே தவறு நடக்கிறது?

நம்முடைய இயல்பான முகத்தை மற்றவர்களுக்கு காட்ட மறுக்கிறோம்.

நமக்கு நாமே முகமூடி போட்டுக் கொள்கிறோம்.

'சூபி' இலக்கியத்தில் 'முல்லா கதைகள்' மிகப் பிரபலமானவை.

ஒவ்வொரு மனிதனின் மனநிலையின் அடிப்படையில் முல்லா கதைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஒரு முறை நாட்டின் அரசர் முல்லாவின் கிராமம் வழியாகச் செல்வதற்கு நேர்ந்தது.

அந்தக் கிராமத்தின் சார்பாக யாராவது ஒருவரிடம் பேச ஆசைப்பட்டார் அரசர்.

முல்லா வாழ்ந்த கிராமத்தில் அவர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர். இதன்காரணமாக முல்லாவை அரசரிடம் பேச தேர்ந்தெடுத்தனர் கிராம மக்கள்.

ஆனால் முல்லாவிற்கு சிறிது தயக்கம் இருந்தது.

'அரசரிடம் நான் எப்படிப் பேசுவது? அவர் அரசர், நான் இந்நாட்டு சாதாரண கிராமத்து மனிதன்'

இதற்கு அரண்மனை ஆலோசகர்கள் ஆலோசனை கூறினர்.

'அரசர் என்னென்ன கேள்விகள் கேட்பார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் என்ன பதில் கூற வேண்டும் என்பதை நாங்கள் உங்களிடம் கூறி விடுகிறோம், அதன்படி நீங்கள் பதில் சொன்னால் போதும்'

அரண்மனை ஆலோசகர்களின் யோசனையை முல்லா ஒத்துக்கொண்டார்.

அரண்மனை ஆலோசகர்கள் "அரசர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் எப்படிச் சொல்வது?" என்பதற்கான வகுப்பினை நடத்தினர்.

"முல்லா, அரசர் உங்களிடம் முதல் கேள்வியாக தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்து கொண்டு வருகிறீர்கள்?" என்று கேட்பார். அதற்குத் தாங்கள் 15 வரிடங்களாக என்று கூறவேண்டும், சரியா?"


"முதல் கேள்விக்கு 15 வருடங்கள் என்று பதில் சொல்லவேண்டும், அவ்வளவுதானே! சரி, அடுத்த கேள்வி என்ன?"


"இரண்டாவது கேள்வியாகத் தங்களுக்கு எத்தனை வயது?" என்று கேட்கப்படும். அதற்குத் தாங்கள் 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரியா முல்லா"


"இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என்று பதில் சொல்ல வேண்டும், சரி எனக்கு ஒரு சந்தேகம்?"


"கேளுங்கள்"


"எனக்கு வகுப்பு எடுத்தது போலவே அரசரிடமும் கூறிவிட்டீர்களா?"


"கூறிவிட்டோம், இந்தக்கிராமம் ஏழைகள் நிறைந்த கிராமம், யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. முல்லாவிற்கு மட்டுமே ஒரளவு தெரியும். எனவே இந்தக் கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் எனவும், இந்த வரிசையில் மட்டுமே இரண்டு கேள்விகளை கேட்க
வேண்டும் எனவும் அரசரிடம் கூறிவிட்டோம். நீங்கள் கவலைப்படவேண்டியதில்லை"

அரண்மனை ஆலோசகர்கள் கூறியபடியே முல்லா செயற்படுவது என்று முடிவு செய்தார்.

அதைப் போலவே அரசரிடமும் இது குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.

அரசரும் அவ்வூருக்கு வந்தார்.

ஆலோசகர்கள் சொன்ன கேள்விகளை அரசர் ஞாபகத்தில் வைத்திருந்தார், ஆனால் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது என்பதை மறந்து விட்டார். அருகில் உள்ள ஆலோசகர்களைக் கேட்க மனதினுள் அகங்காரம் தடை போட்டது.

"முல்லா உங்கள் வயது என்ன?"

இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது, இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வியை அரசர் முதல் கேள்வியாகக் கேட்டு விட்டார்.

முல்லாவோ முதல் கேள்விக்கு 15 வருடங்கள், இரண்டாவது கேள்விக்கு 60 வருடங்கள் என மட்டமே ஞாபகத்தில் வைத்திருந்தார்.

"15 வருடங்கள்"

முதல் கேள்விக்கு முல்லா பதில் சொல்லிவிட்டார்.

அரசருக்கு தலை சுற்றியது! பார்ப்பதற்கு 60 வயதானவராகத் தோன்றுகிறார்! ஆனால் 15 வருடங்கள் என்கிறாரே! அரசருக்கு ஒன்றும் புரியவில்லை!

இரண்டாவது கேள்வியை கேட்டார்.

"முல்லா, தாங்கள் எத்தனை வருடங்களாகத் தியானம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?"

முல்லாவிடம் இருந்து உடனடியாக பதில் வந்தது.

"60 வருடங்கள்"

அரசருக்கு குழப்பம் அதிகமாகிவிட்டது.

"முல்லா, உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?"

"நிச்சயமாக எனக்கு இல்லை அரசே! உங்களுக்குத்தான் என்று நினைக்கிறேன்"

"என்ன சொல்கிறீர்கள்?" அரசர் வெகுண்டெழுந்தார்.

"அரசே! எனக்கு எந்த வரிசையில் பதில்கள் சொல்லப்பட்டனவோ, அதே வரிசையில்தான் உங்களுக்கு கேள்விகளும் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் அதன்படி கேட்காமல் மாற்றிக் கேட்டுவிட்டதை இப்போது உணர்கிறேன். தவறு செய்தது நானல்ல, எனக்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டதோ, அதன்படியே நான் நடந்துள்ளேன். நீங்கள்தான் மாற்றி நடந்துவிட்டீர்கள்.
எனவேதான் எல்லாக் குழப்பமும் நடந்துவிட்டது!"

அரசர் திகைத்தார்முல்லா சொல்வதைப் பார்த்தால் மிகச் சிறந்த ஞானி போலத் தெரிகிறது. நான் மாற்றிக் கேள்விகள் கேட்டிருந்தாலும், பதில்களைச் சரியாகச் சொல்லியிருக்கலாமே!

"முல்லாவே! தங்களுடைய விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. தாங்கள் கூறியது போலவே, நான் கேள்விகளை மாற்றிக்கேட்டிருக்கலாம்,தாங்கள் அதற்குச் சரியான பதில்களைக் கூறியிருக்கலாம் அல்லவா? ஏன் கிளிப் பிள்ளை போல் பதிலைத் தந்தீர்கள்?"

"எனக்குக் கொடுக்கப்பட்ட அறிவுரை அப்படி! இப்போது நாம் இருவரும் ஒன்று செய்யலாம். நாம் இருவரும் கூடிப் பேச வேண்டும். இந்த கிராமத்தைப் பற்றிப் பேச வேண்டும் அவ்வளவுதானே"

"ஆமாம் முல்லா! அதற்காகத்தான் நான் வந்துள்ளேன்"

"அப்படியானால், நாம் இருவரும் நம் முகமூடிகளைக் கழற்றிவிடவேண்டும்"

"முகமூடிகளா!"

"ஆமாம், தாங்கள் அரசர் என்ற முகமூடியை அணிந்துள்ளீர்கள், நானோ 'புத்திசாலி'என்ற முகமூடியை அணிந்துள்ளேன்! இருவரும் ஏதோ ஒருவித முகமூடிகளை அணிந்துள்ளோம். அந்த முகமூடிகளை நாம் கழற்றிவிடுவோம். நான் இந்த கிராமத்தை சேர்ந்த மனிதன்.
தாங்கள் வேறு கிராமத்தைச் சேர்ந்தவர். இந்த முறையில் மனம்விட்டு வெளிப்படையாக இயல்பாகப் பேசுவோம். எல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கப்படும். முகமூடிகளை அணிந்துள்ளவரையில் பிரச்சனைகளும், சங்கடங்களும், இடைஞ்சல்களும் தீர்க்கப்படாது,
வளர்ந்துகொண்டுதான் இருக்கும்".

முல்லா கூறியது உண்மைதான். "நாம் அனைவரும் நமது அகங்காரத்திற்கேற்ப ஒவ்வொரு முகமூடியை அணிந்துள்ளோம். அதன்காரணமாகவே மற்றவர்களுடன் ஒத்துப்போக மறுக்கிறோம்".

நமது முகமூடியை நாம் கழற்றிவிட்டால், நமது அகங்காரமும் விட்டுப்போகும். அகங்காரம் வெளியேறிவிட்டால், நமது இயல்புத் தன்மை நம்மிடம் இருந்து வெளிப்படும். எல்லாவற்றிற்கும் மேலான சக்தி மனிதர்க்கு வழங்கிய பெருங்கொடை நமது அகங்காரமற்ற இயல்பே.

முகமூடிகளை நீக்கினால், நமக்கு நாமே வைத்துக்கொண்ட முகங்களை நீக்கி, இயல்பான முகத்துடன் வாழ்ந்தால் நாம் எல்லோருமே, எப்போதுமே, ஆனந்த நிலையை அடைந்தவர்களாவோம்.


ஸ்ரீ ஆனந்த அஞ்சிகாவின் மனிதனும் தெய்வமாகலாம் புத்தகத்தில் இருந்து....

நல்ல பதிவு.

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment